அன்பளிப்பு
ஒரு முறை பெர்னாட்ஷா பழைய புத்தகக் கடைக்குச் சென்று அங்குள்ள புத்தகங்களை புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் எழுதிய நாடகநூல் ஒன்று அங்கே இருந்தது. அதை எடுத்துப் பிரித்துப் பார்த்தார். அது ஒரு நண்பருக்கு பெர்னாட்ஷா ஏற்கனவே அன்பளிப்பாகக் கொடுத்த புத்தகம். அவருடைய நண்பர் அந்த புத்தகத்தை பழைய புத்தகக் கடையில் போட்டுவிட்டார் போலும். பெர்னாட்ஷா மறுபடியும் அந்தப் புத்தகத்தை விலை கொடுத்து வாங்கினார். அந்த புத்தகத்திலே ஏற்கனவே ‘அன்பளிப்பு’ என்று எழுதியிருந்தது. அதற்கு கீழே ‘புதுப்பித்த அன்பளிப்பு’ என்று எழுதி கையெழுத்திட்டார். மறுபடியும் அதே நண்பருக்கு திருப்பி அனுப்பி வைத்தார். அதாவது அன்பளிப்பை புதுப்பித்தார்.
நாமும் சில நேரங்களில் அன்பளிப்பாக பெற்ற பொருட்களை அதுவும் முக்கியமாக புத்தகங்களை “செல்லாக்காசு போல” தூக்கியெறிவது உண்டு. நண்பர்களே புத்தகங்கள் வாழ்வின் தோழர்கள். அதுவும், படித்து அடிக்கோடிட்ட புத்தகங்கள் பல வருடங்களுக்கு பிறகு எப்போதாவது எடுத்துப் பார்த்தாலும் அந்த புத்தக வரிகள் நம்மை அந்தப் புத்தகத்தைப் படித்த நாள், இடம், பொருள், வயது என்று நம்மையே புதுப்பித்துவிடும். அந்த அடிக்கோடிட்ட வரிகள் நமக்கு நம்முள்ளே புத்துணர்ச்சியூட்டும்.
உதாரணமாக, “எண்ணங்களை மேம்படுத்துங்கள்” என்ற நூலை எழுதிய காப் மேயர் “வெற்றியாளனாக ஆவது எப்படி?” என்பதற்காக மட்டுமே மூன்று அறைகள் முழுவதுமாக நூல்களை வைத்துள்ளாராம்.
“நூல்களை சேமிப்போம்! அறிவை சேமிப்போம்!!”